தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 2,620 மதுக்கடைகள் ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. விண்ணப்பபடிவத்திற்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், விண்ணப்பத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற முடியாது எனவும் அறிவித்தனர். அதன்படி மது கடை ஏலம் எடுப்பதற்காக 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் ஏராளமான பெண்களும் மதுக்கடை ஏலம் கேட்டு விண்ணப்பித்தனர். விண்ணப்ப படிவம் மூலம் ஒரு சொட்டு மது கூட விற்பனை செய்யாமல் தெலுங்கானா அரசுக்கு ரூ.2,639 கோடி வருவாய் கிடைத்தது.
இந்த நிலையில மதுக்கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் விண்ணப்பம் செய்தவர்கள் கலந்து கொண்டனர் . இந்த ஏலத்தில் தெலுங்கானா மாநிலம் முழுவதும் 100 கடைகளை பெண்கள் ஏலம் எடுத்தனர். இது கலால் அதிகாரிகள் இடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நகரப் பகுதிகளில் உள்ள கடைகள் பெண்கள் வசம் வந்துள்ளது. சரூர் நகர் என்ற பகுதியில் மட்டும் மதுக்கடைகளை ஏலம் எடுக்க அதிக அளவில் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். அதிகபட்சமாக சரூர்நகர் 14, ஐதராபாத் 13, கேதராபாத் 8, ஷம்ஷாபாத் 7 கடைகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முந்தைய காலங்கள் போல் இல்லாமல் இந்த ஆண்டு அதிக அளவில் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். அதிக எண்ணிக்கையிலான பெண்கள் ஏலத்திலும் கலந்து கொண்டனர். ஒரு சில கடைகள் பெண்கள் பெயரில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் விண்ணப்பித்துள்ளனர் என கலால் அதிகாரிகள் தெரிவித்தனர். மதுக் கடைகளுக்கு எதிராக பெண்கள் போராடிவரும் நிலையில் 100 கடைகள் பெண்கள் வசமாகி இருப்பது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.