இந்தியாவில் எந்த மாநிலங்களில் மது நுகர்வுக்கு அதிகம் செலவிடப்படுகிறது என்பது தொடர்பான ஆய்வறிக்கையை தேசிய பொதுநிதி மற்றும் கொள்கை அமைப்புவெளியிட்டுள்ளது. ‘மதுபான மூலமான வருவாய்’ என்ற தலைப் பிலான இந்த ஆய்வறிக்கை, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (என்எஸ்எஸ்ஓ) 2011 – 12 தரவுமற்றும் இந்திய பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் (சிஎம்ஐஇ) 2014 – 15 முதல்2022 -23 வரையிலான தரவின்அடிப்படையில் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்திய பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் 2022 -23 நிதி ஆண்டின் தரவின்படி, ஆண்டுக்கு சராசரி தனிநபர் மது நுகர்வு செலவில் தெலங்கானா (ரூ.1,623), ஆந்திர பிரதேசம் (ரூ.1,306), சத்தீஸ்கர் (ரூ.1,227), பஞ்சாப் (ரூ.1,245), ஒடிசா (ரூ.1,156) ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.
மது நுகர்வுக்கு மிகக் குறைவாகசெலவிட்ட மாநிலமாக உத்தர பிரதேசம் உள்ளது. மது மூலம் அதிக வரி வருவாய் பெற்ற வரிசையில் கோவா முதல் இடத்திலும் ஜார்க்கண்ட் கடைசி இடத்திலும் உள்ளன.
இந்திய மாநிலங்களில் மது தயாரிப்பு மீதான வரி வருவாய் 2011-12-ல் 164 சதவீதமாக இருந்த நிலையில் 2021-22-ல் அது 243 சதவீதமாகவும், மது நுகர்வு மீதான வரி வருவாய் 2011-12 -ல் 160 சதவீதமாக இருந்த நிலையில் 2021–22-ல் 252 ஆகவும் உயர்ந்துள்ளது.
ஆந்திரா, பீகார், கோவா, ஜார்க்கண்ட், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் கிராமப்புறங்களில் மாத அடிப்படையிலான தனிநபர் மது நுகர்வு செலவினம் அதிகமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.