திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட திண்டுக்கல் ரோடு கருமண்டபம் நட்சத்திர நகருக்கு எதிரே உள்ள கோரையாற்றங்கரை( குழுமாயி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழி)யில் சாக்லெட்டுகள் கொட்டிக்கிடந்தன. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாக்லெட்கள் பாக்கெட்டுகளை உடைத்து கொட்டப்பட்டு கிடக்கிறது.
அந்த சாக்லெட்டுகளை யார் கொட்டியது, ஏன் கொட்டினார்கள் என தெரியவில்லை. அது போதை சாக்லெட், போலீசாரின் கெடுபிடி காரணமாக அதை பதுக்கி வைத்திருந்தவர்கள் இரவோடு இரவாக வந்து கொட்டி விட்டு போய் விட்டனர் என அந்த பகுதி மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.
போதை சாக்லெட் அல்ல, காலாவதியான சாக்லெட் என்பதால் கொட்டி உள்ளனர் எனவும் பேசிக்கொண்டனர். இப்படி பேச்சுக்கள் பலவாறு இருந்த நிலையிலும் சிலர் குறிப்பாக குழந்தைகள் அந்த சாக்லெட்களை அள்ளிச்சென்றனர்.
காலவதியான உணவு பண்டங்களை தின்றால் அது புட் பாய்சன் ஆகி மனித உயிருக்கே ஆபத்தாகி விடும் என்ற நிலையில் இதை யார் இப்படி சாலையில் கொட்டினார்கள் என்பது தெரியவில்லை. கெட்டுப்போன பொருள் என தெரிந்தால் அதை உரிய முறையில் அழிக்க வேண்டும். அதை விடுத்து இப்படி ரோட்டில் கொட்டுவது மனித உயிர்களுக்கு ஆபத்தாக முடியும். இது குறித்து உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள், விசாரணை நடத்தி சாக்லெட்களை கொட்டியவர்களை கண்டுபிடித்து விசாரணை நடத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.