புதுச்சேரி புஸ்சி தெருவில் உள்ள மண்டபத்தில் இன்று காலை ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணப்பெண் ஆர்த்தி வீட்டின் சார்பில் இந்த வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விருந்து உபசாரங்கள் முடிந்ததும் திருமணத்திற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு தாம்பூல பை கொடுப்பது வழக்கம். இந்த திருமண வீட்டில் தாம்பூல பை வாங்கும் இடத்தில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது.
மேலும் ஒண்ணு போட்டு கொடுங்க, அண்ணே, இன்னொண்ணு கொடுங்க என கேட்டு வாங்கினார்கள். அப்படி என்னதான் கேட்டு வாங்குகிறார்கள் என்றால் தாம்பூல பையில் குவாட்டர் மது பாட்டில்கள் வழங்கப்பட்டது. தாம்பூலப்பையில் தேங்காய், பழங்களுடன் மதுபாட்டிலும் கூடவே பிஸ்கெட் பாக்கெட்டும் கொடுத்தனர். ஒரு பெட்டி நிறைய மது பாட்டில்களை வைத்துக்கொண்டு தாம்பூல பை வாங்கும் போது ஒரு குவர்ட்டர் பாட்டிலை போட்டு கொடுத்தனர். , தாம்பூல பையில் மதுபாட்டில் வைத்து கொடுக்கலாமா என சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
புதுச்சேரியும், மதுவும் பிரிக்க முடியாதவை. அதை நினைவுபடுத்தும் வகையில் நண்பர்கள் இதை செய்து விட்டார்கள் என மணவீட்டார் சார்பில் சப்பைகட்டு கட்டினார்கள். ஆனாலும் எதிர்ப்பு வலுக்கவே சிறிது நேரத்தில் மது பாட்டில் கொடுப்பது நிறுத்தப்பட்டது. ஆனால் மண்டபத்துக்கு வந்திருந்த பாட்டில்கள் அனைத்தும் சிறிது நேரத்தில் மாயமாகி விட்டது. மண்டபத்துக்கு வந்தவர்கள் அனைவரும் இன்று மகிழ்ச்சியோடு திரும்பினர்.