சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில், வளி மண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. அதனால், இன்று அந்தப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, வரும் 24ம் தேதி காலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. அதன்பின், மேலும் வலுப்பெற்று, வடகிழக்கு திசையில் நகரும். தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று மிக கன மழை பெய்யும். துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு, மிக கன மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், நாளை கன மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், நாளை மறுநாள் கன மழை பெய்யும். சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.