நெல்லை, தூத்துக்குடி,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் பெருமழை கொட்டியது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 94 செ.மீட்டர் மழை பெய்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் கரையோர கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மிதந்தன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல், முக்காணி, அகரம் உள்ளிட்ட பகுதிகள் பல நாட்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். வரலாறு காணாத இந்த மழை தென் மாவட்ட மக்கள் மறக்க முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டு சென்றது. தற்போது வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டும் வருகிறார்கள். இந்த நிலையில் இன்று நெல்லை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் வருவாய் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழைப் பொழிவு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று (5ம் தேதி) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன்படி 6ம்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 7ம் தேதி கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 8ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 07.01.2024 அன்று சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
