தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே பூண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (36). எம்.காம். முடித்துவிட்டு முனைவர் பட்டம் படித்து வந்தார். இவர் பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுடன் இணைந்து சிறார் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதாக இண்டர்போல் வாயிலாக மத்திய அரசுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், விக்டர் ஜேம்ஸ் ராஜா 5 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர், சிறுமிகளைத் தொடர்ந்து 2 ஆண்டுகளாக பாலியல் வல்லுறவு செய்து வந்த தகவலும் சிறுவர் – சிறுமிகளைப் பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. மேலும் அவற்றை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டதையும் சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, விக்டர் ஜேம்ஸ் ராஜா மீது சிபிஐ அதிகாரிகள் 2023, மார்ச் 7ம் தேதி வழக்குப் பதிவு செய்து 16ம் தேதி கைது செய்தனர்.இதுகுறித்து தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜ் விசாரணை நடத்தி ஜேம்ஸ் விக்டர் ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 6.54 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.