திருச்சி உறையூர், வடக்கு முத்துராஜா தெருவைச் சேர்ந்தவர் ஆ. தினேஷ்குமார் (38). இவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள சிற்றுண்டிச்சாலையில் தொழிலாளியாக (மாஸ்டராக) பணியாற்றி வந்தார். இந்தக் கடையில் குறைந்த விலையில், டிபன், டீ கிடைக்கும் என்பதால் சிலர் அடிக்கடி வந்து உணவு உட்கொள்வது வழக்கம். அந்த வகையில் வேலை இல்லாமல், ஊர் ஊராக சுற்றித்திரியும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள சூரப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் மா. அழகேசன் (என்ற) குமார் (40) என்பவர் இந்தக் கடையில் இரவு நேரங்களில் டிபன் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
கடந்த 28.09.2022 அன்று இரவு வழக்கம்போல அழகேசன் டிபன் சாப்பிட அந்தக் கடைக்கு சென்றார். அப்போது, கடையின் மாஸ்டர் தினேஷ்குமாரும் உணவு அருந்திக் கொண்டிருந்தார். அழகேசன் சாம்பார் கேட்டபோது, கடையிலிருந்த தொழிலாளி (சப்ளையர்) ஏதோ நினைவில், தினேஷ்குமாருக்கு சாம்பார் ஊற்றியுள்ளார். பின்னர் மீண்டும் கேட்டபிறகு இரண்டாவதாக அழகேசனுக்கு சாம்பார் ஊற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அழகேசன் கடையிலிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து ஆத்திரத்துடன் கையில் ரீப்பர் கட்டையுடன் அங்கு மீண்டும் வந்த அழகேசன், தினேஷ்குமாரை தாக்கியுள்ளார். இதில், மயங்கி விழுந்த தினேஷ்குமாரை கடை ஊழியர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், மறுநாள் தினேஷ்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அழகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட 2 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.சரவணன், குற்றம் உறுதியானதையடுத்து அழகேசன் என்கிற குமாருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசுத்தரப்பில் வழக்குரைஞர் ஏ.பாலசுப்பிரமணியன் ஆஜரானார். அழகேசன் தரப்பில் யாரும் ஆஜராகாததால், இலவச சட்ட உதவி மையம் மூலம் வழக்குரைஞர் சுப்புராஜ் ஆஜரானார்.
