பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள முகப்பு இன்ற காலை முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. மொழி என்பதை குறிக்கும் “பாஷா” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. எல்.ஐ.சி. இணையதளம் இந்தி மொழியில் மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் இந்தியில் மாற்றப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே எல்.ஐ.சி. இணையதளத்தின் முகப்பு பக்கம் இந்தியில் மாற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “LIC இணையதளம் இந்தி திணிப்பிற்கான கருவியாக பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தை தெரிவு செய்வதற்கான விருப்பம் கூட இந்தியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்திற்கு மாற்றினாலும் இந்திலேயே தோன்றுகிறது.
இந்தியாவின் பன்முகத்தன்மை மீது வலுக்கட்டாயமாக ஒற்றை மொழியை திணிக்கும் செயல் இது. ஒன்றிய அரசின் செயல் கலாச்சாரம், மொழியை திணிக்கும் நடவடிக்கை. அனைத்து இந்தியர்களின் பங்களிப்புடன் வளர்ந்த LIC எந்த தைரியத்தில் இப்படி பெரும்பான்மை இந்திய மக்களுக்கு துரோகம் இழைக்கிறது? மொழிக் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.