Skip to content
Home » தவறுகளை திருத்தி மீண்டு வருவோம்… இங்கிலாந்து கேப்டன் பட்லர் பேட்டி

தவறுகளை திருத்தி மீண்டு வருவோம்… இங்கிலாந்து கேப்டன் பட்லர் பேட்டி

  • by Authour

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று டில்லியில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது . அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் 284 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 80 (57) ரன்களும், இக்ரம் 58 (66) ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக அடில் ரஷித் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஜாஸ் பட்லர் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக இளம் வீரர் ஹாரி ப்ரூக் 66 ரன்கள் எடுத்தார். வெறும் 40.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முஜிப் உர் ரகுமான், ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளையும் முகமது நபி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்தது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பேசுகையில், ‘இந்த ஆட்டத்தில் நாங்கள் டாஸில் வெற்றி பெற்று தோல்வியை சந்தித்துள்ளது வருத்தம் அளிக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதில் நாங்கள் செய்ய நினைத்ததை தவறியதாக நினைக்கிறேன். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே நாங்கள் மோசமாக செயல்பட்டதில் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணியில் சில பந்துவீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர். இந்த ஆட்டத்தில் பனி இல்லாததால் நாங்கள் நினைத்த அளவு எங்களால் ரன் குவிப்பை வேகப்படுத்த முடியவில்லை. பந்து நேராக ஸ்டம்பிற்கு வந்ததால் எங்களால் பெரிய அளவு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஒரு அணியாக நாங்கள் இதுபோன்ற செயல்பாட்டை வெளிப்படுத்தியதில் ஏமாற்றம் அடைகிறேன். இருப்பினும் நாங்கள் வலுவாக மீண்டுவர இது போன்ற ஒரு ஆட்டம் எங்களுக்கு பாடமாக இருக்கும். நிச்சயம் இந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்த தொடரில் மீண்டு வருவோம்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *