தீவிரவாதத்தை ஒரு போதும் இந்தியா சகித்துக் கொள்ளாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதி அனில் சவுகான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரையும் விடமாட்டோம். பஹல்காம் தாக்குதலில் பின்னணியில் உள்ளவர்களுக்கும் விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகளை இந்தியா வேட்டையாடும். விரைவில் துள்ளியமான மற்றும் மிகப்பெரிய பதிலடி கொடுக்கப்படுவதை, தாக்குதலுக்கு காரணமானவர்கள் பார்ப்பார்கள். குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள். பயங்கரவாதத்திற்கு எதிராக பல்வேறு நாடுகளும் ஒன்றிணைந்து செயலாற்றி வருகின்றன. தீவிரவாதத்தை ஒரு போதும் இந்தியா சகித்துக் கொள்ளாது” என்றார்.