மயிலாடுதுறையில் கடந்த 2ம் தேதி ஒரு சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. இதனால் அதனை பிடிக்க மாவட்ட நிர்வாகம், வனத்துறை, காவல்துறை தீவிர நடவடிக்கையில் குதித்தனர். ஆங்காங்கே கூண்டுகள், கண்காணிப்பு காமிரா வைக்கப்பட்டு சிறுத்தையை தேடி வந்தனர். இதற்கிடையே 2 நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தை தென்படவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு சிறுத்தை அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில் தென்பட்டதை சிலர் பார்த்து உள்ளனர். நேற்று இரவு அதே சிறுத்தை அரியலூர் அடுத்த செந்துறை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடமாடியதை அங்குள்ளவர்கள் பார்த்துள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்திலும் பற்றம் பற்றிக்கொண்டது. சிறுத்தையின் நடமாட்டம் தொடர்பான கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளும் கிடைத்துள்ளதால் அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் வனத்துறை மற்றும் போலீசார், வருவாய்த்துறை, தீயணைப்புத்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்வர்ணா கூறும்போது, இரவு நேரங்களில் மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம். கவனமுடன் வெளியே சென்று வரவேண்டும். எங்காவது சிறுத்தை நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக போலீஸ் நிலையத்துக்கோ, வனத்துறைக்கோ தெரியப்படுத்துங்கள். சிறுத்தையை பிடிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது’ என்றார்.
இதற்கிடையே மயிலாடுதுறையின் நடமாடிய புலிதான் இங்கு வந்ததா அல்லது இது வேறு சிறுத்தையா என்பதை உறுதி செய்ய மயிலாடுதுறை மாவட்ட வன அதிகாரிகள் அரியலூர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மயிலாடுதுறை மற்றும் அரியலூர் மாவட்டத்தில் பதிவான கால் தடங்களை ஆய்வு செய்தும், கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஒப்பிட்டு பார்த்தும் உறுதி படுத்த உள்ளனர்.
அரியலூர் மாவட்ட வனத்துறை அலுவலர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் வனத்துறையை சேர்ந்தவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தோம் .ஆனால் அங்கு கால் தடயங்கள் தெளிவாக கிடைக்காத நிலையில் இரண்டு பிரிவாக பிரிந்து மாலை வரை அருகில் உள்ள காடுகளில் மக்களை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி தேடுதல் பணியை மேற்கொண்டு வந்தோம் .இரவு நேரத்தில் தேடுதல் பணியை மேற்கொண்டு வந்த நிலையில் செந்துறை அரசு மருத்துவமனையில் 9 மணி அளவில் சிறுத்தை வேலியை தாண்டி போனதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் வனத்துறையினர் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமரா ஆய்வு செய்தபோது அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது .
மேலும் 11 மணி அளவில் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் வீட்டின் அருகில் சிறுத்தையை பார்த்ததாக தெரிவித்தார். இதனையடுத்து வனத்துறை தீயணைப்பு துறை வருவாய் துறை காவல் துறை ஆகியவை சேர்ந்து தேடுதல் பணியை முடுக்கி விட்டுள்ளோம் ,இதற்கு முன்கூட்டியே மயிலாடுதுறையில் சிறுத்தையை தேடுதல் பணியில் ஈடுபட்ட தெர்மோ டிரோன் எனப்படும் கருவியைக் கொண்டு சிறுத்தை உள்ள இடத்தை வெப்பத்தை கொண்டு கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது மற்றொரு டீமின் மூலம் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தை தான் இங்கு வந்துள்ளதா, என்பதை உறுதியாக சொல்ல முடியாது. இரண்டு சிறுத்தைகளின் அடையங்களை ஒப்பிட்டு பார்த்தால் தான் உறுதியாக சொல்ல முடியும் இரண்டு டீம்கள் வந்தவுடன் காவல்துறை வருவாய்த்துறை உதவியுடன் சிறுத்தையை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.