கோவை, வடவள்ளி அருகே ஓணப்பாளையம் பகுதியில் ஆடுகளை வேட்டையாடி அட்டகாசம் செய்த சிறுத்தை வனத்துறையினரால் நேற்று இரவு வலை விரித்து பிடித்தனர்.
கோவை, வடவள்ளி அடுத்த சிறுவாணி சாலை ஓணாப்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெண்ணிலா என்ற விவசாயி தனது 5 ஏக்கர் தோட்டத்தில் வளர்த்து வந்த 8 ஆடுகளில் 4 ஆடுகளை சிறுத்தை கொன்றது. அதன் சி.சி.டி.வி காட்சிகளில் சிறுத்தை ஆடுகளை வேட்டையாடுவதும், ஒரு ஆட்டை கவ்வி செல்வதும் பதிவாக இருந்தது. அங்கு இருந்த 4 ஆடுகளை கொன்ற சிறுத்தை மீண்டும் அதே பகுதிக்கு வந்து ஆடுகளை உள்ளதா ? என்று தேடியது. அதன் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியது.
அதே போல மேலும் பாரதியார் பல்கலைக் கழக வளாகத்திற்குள் சிறுத்தை ஒன்று தென்பட்டு உள்ளது. பல்கலைக் கழக நிர்வாகம் மாணவர்களுக்கு விடுமுறை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தது. வனத் துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வனத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்து, அதை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.
ஏற்கனவே ஆடுகளை கொன்ற இடத்திற்கே சிறுத்தை ஓணாப் பாளையம் பகுதியில் மீண்டும் வந்து ஆடுகளை தேடி வந்தது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வந்தது.
இதனை அடுத்து நேற்று இரவு பூச்சியூர் அருகே உள்ள கலிங்க நாயக்கன் பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் சிறுத்தை பதுங்கி இருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக 12 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் அங்கு சென்று பதுங்கி இருந்த சிறுத்தையை வளை விரித்து பிடித்து உள்ளனர். அனுமதிக்கு கிடைத்த பின்னர் அதனை அடர்ந்த வனப் பகுதிக்கு கொண்டு சென்று விட வனத் துறையினர் திட்டமிட்டு உள்ளனர். வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சிறுத்தையை பிடித்தது அப்பகுதி மக்கள் இடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.