கோவை, தடாகம் பகுதியில் சிறுத்தை தாக்கி ஆடு ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, சின்ன தடாகம் பகுதியில் உள்ள வடக்கு தோட்டம் பகுதியில் ரங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் ரங்கராஜ் 3 ஆடுகள் மற்றும் 15 மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து
வருகிறார். நேற்று இரவு ஆடுகள் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு ரங்கராஜும் அவரது அண்ணன் நடராஜனும் ஆட்டுத் கொட்டகைச் சென்றனர்.
அங்கு சென்று பார்த்த போது, சிறுத்தை தாக்கியதில் ஆடு ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக இச்சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வனத் துறையினர் சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.