அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக அங்கீகரிக்கும் படி அதிமுக கொறடா சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் சட்டப்பேரவையில் அப்படி ஒரு பதவி இல்லை எனவும், துணை தலைவர் என்பது அவர்களாகவே உருவாக்கிய பதவி எனவும் கூறி சபாநாயகர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். இதன் காரணமாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அருகருகே அமர்ந்து இருந்தனர்.
இதனிடையே உச்சநீதிமன்றமே அதிமுக பொதுக்குழு செல்லும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளதால் மீண்டும் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி குறித்த கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், சட்டமன்றத்தில் யாருக்கு எங்கு இருக்கை கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய முழு உரிமை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைப்படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஏற்றார் போல் இருக்கைகள் வழங்கும் முழு உரிமை என்னிடம் உள்ளது.அனைவருக்கும் சமமான உரிமையை கொடுப்பதே எங்களின் நோக்கம். இவ்வாறு கூறினார்.