Skip to content
Home » உடுத்திய துணியுடன் தப்பி வந்தோம்…. சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் பேச்சு…

உடுத்திய துணியுடன் தப்பி வந்தோம்…. சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் பேச்சு…

  • by Senthil

சூடான் நாட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்து, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், உள்நாட்டு போர் நடக்கும் சூடானில் சிக்கி தவித்ததால் மீட்கப்பட்ட 9 பேர் டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை, மதுரைக்கு வந்தடைந்தனர். இதில் 5 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 4 பேர் மதுரையை சேர்ந்தவர்கள். விமான நிலையங்களுக்கு வந்தவர்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகள்  வரவேற்றனர்.

சூடானில் இருந்து மதுரை திரும்பிய மாணவி ஒருவர் அங்குள்ள சூழல் குறித்தும், தாங்கள் பட்ட கஷ்டங்கள் குறித்தும் கூறும்போது; நாங்கள் இருக்கும் பகுதியை கைப்பற்றுவதற்காக இரு தரப்பினரும் பயங்கரமாக சண்டையிட்டு வருகின்றனர். அவர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என கூறினாலும், துப்பாக்கிகள் மற்றும் குண்டுவெடிப்புகளால், அவர்களுக்கே தெரியாமால் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் பகுதியில் போர் தொடங்கிய நாளிலிருந்து குடிநீர், மின்சாரம் தடைபட்டது. இதனால், நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். எங்களிடம் உள்ள உணவை சிக்கனமாக பயன்படுத்தி வாழ்ந்தோம். சூடானில் இருந்து இந்தியா வருவதற்கு இந்திய தூதரக அதிகாரி எங்களுக்கு உதவினார், எங்களை பத்திரமாக சொந்த ஊர் வர உதவிய இந்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

சூடான் நிலவரம் குறித்து கிருத்திகா என்ற மற்றொரு பெண் கூறும்போது; நான் கடந்த 8 ஆண்டுகளாக சூடானில் வசித்து வருகிறேன். கடந்த 15 நாட்களாக அங்குள்ள சூழல் எங்கள் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது. கடந்த 8 நாட்களாக நாடோடிகளாக வாழ்ந்தோம். கஷ்டப்பட்டு சம்பாதித்த அனைத்தையும் அங்கேயே விட்டுவிட்டு ஒரு துணியை மட்டும் கையில் கொண்டுவந்துள்ளோம். எங்களை பத்திரமாக அழைத்துவந்த ஒன்றிய அரசுக்கும், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!