இன்று ஆங்கில புத்தாண்டு 2025 பிறந்தது. இதையொட்டி கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜை நடந்தது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனா. வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் குடும்பத்தோடு வந்து கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். புத்தாண்டையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: புத்தாண்டாகிய 2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும். தமிழகம் அதற்கு வழிகாட்டும். அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: நம் தமிழக மக்கள், திமுக ஆட்சி அவலத்தின் இருட்டிலிருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையோடும், பல கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும், புத்தாண்டை எதிர்கொள்கிறோம். நம்முடைய தேர்வு, நமக்கானது மட்டுமின்றி, நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குமானது என்பதை நினைவில் கொண்டு, நல்லவற்றையே தேர்ந்தெடுப்போம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக நின்று தமிழகத்தைப் பாதுகாக்க சூளுரைப்போம். தமிழக மக்களுக்கு, உலகுவாழ் தமிழர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா : உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், ஆகிய மூன்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் உறுதியாக கிடைக்க வேண்டும். 2025-ம் ஆண்டு அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைய வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: புத்தாண்டில் அனைவரும் நலமுடன், வளமுடன், மகிழ்ச்சியுடன் வாழ இறைவனும், இயற்கையும் துணை நிற்க வேண்டும்.
இதுபோல புதுச்சேரி மற்றும் தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாமக தலைவர் அன்புமணி, பாஜக பிரமுகர் ஆர்.சரத்குமார், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, டிடிவி தினகரன், திக தலைவர் வீரமணி, இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சியின் தலைவர் எம்.எஸ்.மார்டின், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி நிறுவன தலைவர் விஎம்எஸ் முஸ்தபா உள்ளிட்ட தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.