கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் ஏரித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 28). இவர் ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரை ஆனந்தன் என்ற வழக்கறிஞர் பின் தொடர்ந்து அரிவாளால் பலமாக பல்வேறு இடங்களில் வெட்டி உள்ளார். இதில் படுகாயமடைந்த கண்ணன், சாலையிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மற்றும் சக வழக்கறிஞர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென மற்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக கண்டன குரல் எழுப்பினர். இதனிடையே வழக்கறிஞரை வெட்டிய ஆனந்த் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.