கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மூத்த வழக்கறிஞர் சத்யநாராயணன் என்பவரிடம் கண்ணன் (30) பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் அதேபோல அங்கு சத்யாவதி என்ற பெண்ணும் பயிற்சி வழக்கறிஞராக உள்ளார்.
இந்த நிலையில், கண்ணனுக்கும், சத்யாவதியின் கணவர் ஆனந்திற்கும் இடையே முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டு கைகலப்பாகவும் மாறி இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை கண்ணன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு வெளியே வரும் போது, கண்ணனை வழி மறித்த ஆனந்த் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டித்தள்ளினார்.
இதில், ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து விழுந்த கண்ணன் உயிருக்காக போராடி கொண்டிருந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே, கண்ணனை வெட்டிவிட்டு தப்பிய ஆனந்த் நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில், அவரது மனைவி சத்யாவதியையும் காவல்துறை கைது செய்துள்ளது. சத்யாவதியிடம் நடத்திய விசாரணையில், இந்த கொலை முயற்சிக்கு அவரும் உடந்தையாக இருந்ததாக கூறி போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வக்கீல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் எதெரிவித்து சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வக்கீல்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.