விசைத்தறியாளர்களுக்கு மாதம் ரூ.1000 யூனிட் மின்சாரமும், கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாக அதிகரித்தும் இலவசமாக வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையொட்டி தமிழக முதல்வருக்கு விசைத்தறியாளர்கள், மற்றும் கைத்தறி நெசவாளர்கள் நாளை மாலை 4 மணிக்கு கோவை கருமத்தம்பட்டியில் நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடத்துகிறார்கள்.
இந்த விழா ஏற்பாடுகளை தமிழக மின்துறை மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் அவர்களுக்கு விசைத்தறி நெசவாளர்கள், கைத்தறியாளர்கள் சார்பில் கருமத்தம்பட்டியில் நாளை மாலை பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில், பல ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அதற்கான விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது .
டாஸ்மாக் டெண்டர் விவகாரம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, டாஸ்மாக் டெண்டர் தொடர்பாக அறப்போர் இயக்கம் ஜெயராமன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு அறிக்கையை பார்த்து சிரிப்பதா என்று தெரியவில்லை.
இடைத்தேர்தல் நடைபெற்றதால், ஈரோடு நீங்கலாக, மற்ற 43 குடோனில் இருந்து சரக்குகளை எடுத்து செல்ல மொத்தம் மொத்த டெண்டரின் மதிப்பே 96 கோடி ரூபாய் தான். ஆனால் அதில் ஆயிரம் கோடி ரூபாய் என சொல்லி
உள்ளனர்.
ஆன்லைன் மூலம் டெண்டர் விடவேண்டும் என்கிறார். டாஸ்மாக் தொடங்கப்பட்ட காலம் முதல் கடைபிடிக்கும் டெண்டர் முறையைத்தான் பின்பற்றி உள்ளோம். அத்தனை டெண்டரையும் ஒட்டுமொத்தமாக ஒரே ஆளிடம் கொடுக்கவேண்டும் என்கிறாரா, அப்படி ஒரே ஆளிடம் கொடுத்தால் அவ்வளவு தொழிலாளர்கள் அவர்களிடம் இருப்பார்களா, ஜெயராமன் மீது எனக்கு நல்ல மரியாதை உண்டு.
விவரம் தெரியாவிட்டால் என்னிடமோ, டாஸ்மாக் அதிகாரிகளிடமோ கேட்டிருக்கலாம். ஜெயராமன் இந்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும். அறப்போர் இயக்கத்தின் மீது மிகுந்த மரியாதை உள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர் என்பது அபத்தமானது, அவர் திரும்ப பெற வில்லை எனில், நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் .இதற்காக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் தயாராகிறது. விரைவில் அவருக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் எம்பி நாகராஜ், நித்தியா மனோகரன், ஏர்போட் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.