தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், மாநகர காவல் ஆணையர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் தற்போதைய சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, குற்றச் சம்பவங்களை கண்டறிந்து தடுப்பது, கொலை-கொள்ளை சம்பவங்களில் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை. சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. நிம்மதியாக உள்ள நாட்டில் தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். கடந்த 6 மாத குற்ற வழக்குகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
மக்களவை தேர்தல் வரவுள்ளதால் காவல்துறை மிக மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். காவல்நிலைய மரணங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை கண்டறியப்பட்டவுடன் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். Also Read – தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் காவல்துறை அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொது இடங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். பெண்கள் அளிக்கும் புகார்களின் மீது காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் செய்வதற்கான அனைத்து ஆவணங்களும் இருந்தால் மட்டுமே கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராயம் உள்ளிட்டவற்றின் சட்டவிரோத விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்களின் புகார்கள் மீது நடுநிலை தவறாமல் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் நச்சு கருத்தை பரப்புவோரால்தான் சமூக நீதி சீர்குலைக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் சாதி, மத மோதல்களை தூண்டுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி, மதம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் விசாரிக்கப்படும்போது, காவலர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். காவல்நிலையத்திற்கு வரும் புகார்கள் மீது விருப்பு, வெறுப்பு இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றங்களே நடைபெறவில்லை என்ற செய்தி மட்டுமே, எனக்கு திருப்தியை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.