தஞ்சை புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி. இவருடைய மகன் மதிவல்லவன் (26). இவர் அதே பகுதியில் சொந்தமாக வாடகைக்கு கார்களை விடும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.
மதிவல்லவன் கடந்த 12 ம் தேதி தனது அலுவலகத்தை வழக்கம்போல் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அலுவலகத்தில் இருந்த லேப்டாப்கள் மற்றும் பணம் ஆகியவற்றை காணவில்லை.
இது குறித்து மதிவல்லவன் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், தஞ்சை கீழவாசல் ஒட்டக்காரத்தெருவை சேர்ந்த கோவிந்தன் என்பவரது மகன் சோனிகுமார் (38) லேப்டாப்கள் மற்றும் பணத்தை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து 5 லேப்டாப், ரூ. 10 ஆயிரம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் சோனிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.