தமிழகத்தில் அமைச்சர்கள், மாநில அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீப காலமாக புகுந்து அமைச்சர்களை விசாரணைக்கு அழைப்பது, சோதனை நடத்துவது என அதிரடி காட்டினர். மத்திய அரசு அதிகாரிகள் மிகவும் நல்லவர்கள், அவர்கள் நடவடிக்கை சரியாகத்தான் இருக்கும். அவர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள், லஞ்சம் வாங்க மாட்டார்கள். என ஒரு மாயதோற்றத்தை தமிழகத்தில் உருவாக்கி, அமலாக்கத்துறையினர் பரிசுத்தவான்கள் என்பது போல ஒரு பிம்பத்தை இமலாய அளவுக்கு கட்டமைத்து இருந்தனர்.
ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய அரசின் தூண்டுதலில் எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து சோதனை செய்யும்
என்பதும், பாஜகவின் ஒரு பிரிவு போல அது செயல்படுகிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் அது உண்மை தான் என்பதை இன்று நடந்த ஒரு சம்பவம் உறுதி செய்து உள்ளது.
டாக்டர் சுரேஷ்பாபுவிடம் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் ரூ. 51 லட்சம் லஞ்சம் தரவேண்டும் என்று ED அதிகாரி அங்கிட் திவாரி தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்துபோன டாக்டர் சுரேஷ்பாபு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஆன்லைனில் புகார் அளித்தார். இப்புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.31 லட்சம் பணத்தை டாக்டர் சுரேஷ்பாபுவிடம் கொடுத்து அனுப்பியிருந்தனர். லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டு காரில் தப்பிய அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் மடக்கி பிடித்தனர். முதலில் ரூ. 20 லட்சம் பெற்ற நிலையில் மீதமுள்ள ரூ. 31 லட்சத்தை வாங்கியபோது கையும் களவுமாக சிக்கினார். இதனை தொடர்ந்து லஞ்சம் பெற்ற ED அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டார்.