தஞ்சாவூர், செவ்வப்ப நாயக்கனேரி பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி. இவர் தெற்கு அலங்கத்தில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். கடந்த 2013ம் ஆண்டு, தொழில் உரிமம் புதுப்பிக்கவும் மற்றும் மின்னணு இயந்திர தராசு புதுபித்து முத்திரை பெறுவதற்காகவும், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.
அப்போது தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஜெயலெட்சுமி தொழில் உரிமம் மற்றும் இயந்திர தராசு புதுப்பித்து முத்திரை வைத்துத் தர 2,500 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அந்தோணிசாமி, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் கடந்த 2013ம் ஆண்டு ஜூலை. 8ம் தேதி ஜெயலெட்சுமி லஞ்சம் வாங்கிய போது, போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இவ்வழக்கு, கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா ஜெயலட்சுமிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். வழக்கை சிறப்பாக நடத்திய, அரசு கூடுதல் வழக்கறிஞர் முகம்மது இஸ்மாயில், இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத், எஸ்.ஐ., அய்யப்பன் ஆகியோரை, லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் டி.எஸ்.பி., நந்தகோபால் பாராட்டினார்.