அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் இயற்கை விவசாயி செல்வமணி.இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் கடந்த 2012 ம் ஆண்டு ஜெயங்கொண்டத்திலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில், இந்தியன் பெட்ரோல் பங்கிற்கு பின்புறம் உள்ள ஒரு ஏக்கர் 11 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் வசிக்கும், அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை சேர்ந்த கணேசன் என்பவர், 2012 ம் ஆண்டு செல்வமணி வாங்கிய, ஒரு ஏக்கர் 11 செண்டை 7 கோடியே 20 லட்சம் என விலை நிர்ணயம் செய்து, ஒரு கோடியே 40 லட்சம் பணத்தை முன்பணமாக கொடுத்து வாங்கியுள்ளார்.
மீதியுள்ள தொகையை நிலத்தை பத்திரப்பதிவு செய்யும் போது தருகிறேன் என்றும், நிலத்தின் பெயரில் தான் கடன் வாங்கி மீதமான தொகையை தர வேண்டும். இல்லையென்றால் செல்வமணிக்கு சொந்தமான இடத்தில் கட்டிடங்களை கட்டித் தருவதாகவும் கூறியுள்ளார்.இதன் பேரில் செல்வமணி தனது நிலத்தை கணேசனுக்கு கிரையம் எழுதிக் கொடுத்துள்ளார்.12 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை கணேசன் பணத்தை தரவில்லை.
இந்நிலையில் கடந்தாண்டு மீதி தொகைக்கு கணேசன் செல்வமணிக்கு கொடுத்த காசோலையும் வங்கியில் இருந்து திரும்பியது. இது குறித்து செல்வமணி அரியலூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதன் பேரில் நடைபெற்ற விசாரணையில் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார், ஆறு கோடி மதிப்பிலான நிலத்தை ஏமாற்றிய கணேசன் மற்றும் அவரது சகோதரர்களான சங்கர், ரமேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.