பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாவின் மகளான லலிதா பாரதி, இசையை முறையாகக் கற்றுக்கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை ஆசிரியராக பணியாற்றி பல மாணவர்களை உருவாக்கியவர். பெண்ணியம் சார்ந்த செயல்பாடுகளிலும், பாரதியாரின் பாடல்களை இசை மற்றும் நூல் வடிவில் பரப்பும் தமிழ்ப்பணியிலும் முக்கிய பங்கு கொண்டிருந்தார். இந்நிலையில், லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணியளவில் அவரது இல்லத்தில் காலமானார். அவரது உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு குறித்து தகவல் அறிந்து அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள் வழி பேத்தி லலிதா பாரதி அம்மையார் (94) வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன். மகாகவி பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாளின் மகளான லலிதா பாரதி அவர்கள் 40 ஆண்டுகளாக இசையாசிரியராகப் பணியாற்றிவர் என்பதோடு, பாரதியாரின் பாடல்களை இசைவடிவில் பரப்பும் தமிழ்ப்பணியிலும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைசிறந்த தமிழ்க்குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான லலிதா பாரதி அவர்களின் மறைவால் வாடும் அவர்தம் உறவினர்கள், தமிழார்வலர்கள் உள்ளிட்டோர்க்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.