திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் சௌந்தரபாண்டியன். தொடர்ந்து 4வது முறையாக லால்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். சமீபகாலமாக லால்குடி தொகுதியில் அமைச்சர் நேரு கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் ஆய்வு கூட்டங்களில் எம்எல்ஏ சௌந்தரபாண்டியனுக்கு அழைப்பு இல்லை என்றும் லால்குடி கட்சி நிர்வாகிகள் எம்எல்ஏ கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை என திமுகவினரே வருத்தப்பட்டு கூறுகின்றனர். இவற்றை சுட்டிக்காட்டி சௌந்தரபாண்டியன் தனது பேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று நாளிதழ் ஒன்றில் வெளியான விளம்பரம் ஒன்றை பதிவிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் எம்எல்ஏ சௌந்தரபாண்டியன்.. தெரிந்தோர் விளக்கம் சொல்லுங்கள்.. என தலைப்பிட்டு அந்த விளம்பரத்தை பதிவிட்டிருக்கிறார் எம்எல்ஏ சௌந்தரபாண்டியன். எம்எல்ஏவின் இந்த பதிவு பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பேஸ்புக் பதிவிற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பலரும் 4 முறை வெற்றி பெற்ற எம்எல்ஏவின்போட்டோ இல்லாமல் விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது என விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த பதிவிற்கு என்ன அர்த்தம் என எம்எல்ஏ சௌந்தரபாண்டியனை தொடர்புகொண்டு கேட்டதற்கு ‘ இதைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என கூறி முடித்துக்கொண்டார்.