கடந்த வாரம் முழுவதும் ரஜினி படங்களின் அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை கிளப்பி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ‘ஜெயிலர்’ படத்தின் மாஸான வீடியோ ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் அவரது கேரக்டருக்கான போஸ்டர் வெளியாகி இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.
ரஜினி நடிப்பில் கடைசியாக ‘அண்ணாத்த’ படம் வெளியாகி இருந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் சுமாரான வரவேற்பையே பெற்றது.
இதனால் ரஜினி தற்போது நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக ‘ஜெயிலர்’ உருவாகி வருகிறது. மேலும் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக ரிலீசான ‘பீஸ்ட்’ ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்ததால் இந்தப்படத்தை எப்படியாவது ஹிட்டாக்கி விட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
இதனிடையில் ரஜினி தனது ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகிறது. இந்நிலையில் இந்தப்படத்தில் ரஜினி கதாபாத்திரத்திற்கான ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில், ரஜினி மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு அவரது தோற்றமும் வெளியிடப்பட்டுள்ளது. தொப்பி, கண்ணாடி அணிந்து ரஜினி மாஸாக நடந்து வரும் போஸ்டரில் ‘சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக’ என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். ‘லால் சலாம்’ படப்பிடிப்பிற்காக ரஜினி தற்போது மும்பை பறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.