தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சுகந்தி. கோவிந்த ராஜ் உயிரிழந்துவிட்டதால், அவரது பெயரில் இருந்த இடத்தை பட்டா மாற்றம் செய்வதற்காக வருவாய்த் துறையில் ஒரு மாதத்துக்கு முன்பு சுகந்தி விண்ணப்பம் செய்தார்.
தொடர்ந்து ஒரு மாதமாக அலைக்கழிக்கப்பட்ட நிலையில் சுகந்தியிடம் பட்டா மாற்றம் செய்ய கொல்லாங்கரை கிராம நிர்வாக அலுவலர் எம்.வி. வள்ளி ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
இருப்பினும் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து சுகந்தி அலைக்கழிக்கப்பட்டார். இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத சுகந்தி இதுகுறித்து ஊழல் தடுப்பு காவல் பிரிவு போலீசில் புகார் செய்தார். அவர்களின் ஆலோசனையின் படி நேற்று கொல்லாங்கரை கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் வள்ளியிடம் ரூ. 2 ஆயிரத்தை வழங்கினார்.
அப்போது மறைந்திருந்து கண்காணித்த தஞ்சாவூர் ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் அலுவலகத்துக்குள் சென்று வள்ளியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.