இயற்கை எழில் கொஞ்சும் இமாசல பிரதேச மாநிலத்தில் 68 இடங்களில் 35 இடங்களில் வெற்றி பெற்றாலே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க. 25 இடங்களில் வெற்றிக்கனி பறித்துள்ளது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இங்கும் கால் பதித்து விடலாம் என்ற ஆம் ஆத்மியின் கனவு நிறைவேறவில்லை. அந்த கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்தநிலையில், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 68 சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே பெண் உறுப்பினர். இந்தத் தேர்தலில் பாஜக 6 பெண் வேட்பாளர்களை நிறுத்தியது. காங்கிரஸ் 5 பெண் வேட்பாளர்களையும், ஆம் ஆத்மி 3 பெண் வேட்பாளர்களையும் நிறுத்தின. இவர்களில் ரீனா காஷ்யப் என்ற ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். பாஜக சார்பில் பச்சாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர் இவர். இந்தத் தேர்தலில், வாக்களித்த வாக்காளர்களில் 49% பேர் பெண்கள். இருந்தும் ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே தேர்வாகி இருப்பது தான் பெரும் சோகம். கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில் 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவைவிட காங்கிரஸ் பெற்ற கூடுதல் வாக்கு விகிதம் 0.90 இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ள காங்கிரஸ் பெற்ற வாக்கு 43.90 சதவீதம். 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்த பாஜக பெற்ற வாக்கு 43 சதவீதம். இரு கட்சிகளுக்கும் இடையேயான வித்தியாசம் 0.90 சதவீதம் மட்டுமே.