தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் தகுதியுள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தமிழக மக்கள் மிகவும் ஆவலோடு இந்த திட்டத்தை எதிர்பார்த்திருந்த நிலையில், பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை அறிவிக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இது குறித்து திருச்சியில் உள்ள பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பாலக்கரையை சேர்ந்த ரம்யா என்ற இல்லத்தரசி கூறியதாவது:
தமிழக முதல்வர் சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. அதன்படி அவர் செப்டம்பர் முதல் உரிமைத்தொகை தருவோம் என அறிவித்திருக்கிறார். எங்களைப்போன்ற நடுத்தர இல்லத்தரசிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு குடும்பத்தின் தேவைகளையும் எந்த அரசும் நிவர்த்தி செய்ய முடியாது. ஆனாலும் அரசு தன்னால் முடிந்த உதவியை செய்ய முன் வந்துள்ளதை மனதார வரவேற்கிறோம். இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்கிறோம்.
சமயபுரம் கிருஷ்ணவேணி: தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.1000 திட்டம் அறிவித்ததற்காக அவருக்கு நன்றி . எல்லோருக்கும் பணம் கொடு என அதிமுக, பாஜக கூறுகிறது. அது எப்படி சாத்தியம். எதிர்க்கட்சிகள் என்பதால் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. கோடீஸ்வரன், அரசு ஊழியர்கள், பென்சன் வாங்குகிறவர்கள் குடும்பத்துக்கெல்லாம் எப்படி கொடுக்க முடியும். எனவே தகுதிவாய்ந்தவர்களை சரியாக தேர்வு செய்து உரிமைத்தொகை வழங்குவது தான் நல்லது. அதை வரவேற்கிறோம்.
முசிறியை சேர்ந்த ரங்கம்மாள்: திமுக ஆட்சிக்கு வந்தால் தான் பெண்கள் நலன்கள் பாதுகாக்கப்படும். அந்த வகையில் இந்த உரிமைத்தொகையை அறிவித்த முதல்வருக்கு நன்றி. மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கினால் அது குடும்ப செலவினத்தை ஓரளவு ஈடுகட்டும். அதற்காக தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்கும் 1000 ரூபாய் கொடு என எதிர்க்கட்சிகள் வீண் பேச்சு பேசி காலத்தை வீணாக்க வேண்டாம். கொடுக்கிற மகாராசன் ஸ்டாலின் நல்லா இருக்கணு1ம்.
தஞ்சை மாலினி: மகளிர் உரிமைத்தொகை அறிவித்த முதல்வருக்கு நன்றி. இது எங்களைப்போன்ற ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திமுக ஆட்சி என்றால் அது பெண்களுக்கான பொற்கால ஆட்சி. தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் நலத்திட்டங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டவை. அந்த வகையில் இந்த உரிமைத்தொகை கொடுத்த முதல்வரை பாராட்டுகிறோம். அவர் நல்லா இருக்கணும்.
இதுபோல தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வரவேற்று உள்ளனர்.