கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தமிழ்நாட்டில் 1 கோடியே 25 லட்சம் பெணக்ளுக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்காக கலெக்டர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் இன்று நடைபெறுவதாகவும் வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. அதில், “மகளிர் உரிமைத்தொகை (ரூ.1,000) பெறுவதற்காக மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கவும், உடனே அனைவருக்கும் கிடைக்கும், இன்று மற்றும் வருகிற திங்கள், செவ்வாய் ஆகிய கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலையிலேயே இந்த தகவல் பரவிய நிலையில், இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. ஆனாலும் பெண்கள் கலெக்டர் அலுவலகங்களில் குவிந்தனர்.நெல்லை, விழுப்புரம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் ஏராளமான பெண்கள் குவிந்தனர். அவர்களிடம் வாட்ஸ் அப்பில் வரும் தவறான தகவலை நம்பியாரும் வர வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த பெண்கள், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகங்களில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் உண்மை நிலவரத்தை எடுத்துக்கூறி அவர்களை வெளியே அனுப்ப ஊழியர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.
தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பாக இவ்வாறு தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.