குவைத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 50 பேர் பலியானார்கள். இவர்களில் கேரளாவை சேர்ந்த 24 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேரும் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர். குவைத் தீ விபத்தில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் ஆர்.மனோகர், லதா தம்பதியின் மகன் புனாஃப் ரிச்சர்ட் ராய் என்ற 28 வயது இளைஞரும் பலியாகி உள்ளார். இவர் இறந்ததை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று உறுதி செய்தார். ரிச்சர்ட் இறந்து விட்டதை அங்குள்ள தமிழ்ப்பல்கலைக்கழகங்கள் உறுதி செய்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
இறந்து போன ரிச்சர்ட் குவைத் நாட்டில் மங்காப் என்ற இடத்தில் தனியார் கட்டுமானப் கம்பெனியில் குவாலிட்டி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் பேராவூரணி வந்துவிட்டு ஒன்றரை மாதம் விடுமுறையை கழித்து விட்டு திரும்பி சென்று உள்ளார். விபத்து நடந்த கட்டிடத்தில் இவர் நேற்று முன்தினம் இரவு தூங்கும்போது விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த கருப்பண்ணன் ராமுவும் பலியாகி உள்ளார். இவர் அங்கு சூப்பர் மாாக்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவர் ஒன்றரை மாதத்தில் ஊருக்கு வர இருந்த நி்லையில் இறந்து விட்டார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாரி்யப்பன் வீராசாமியும் இதில் பலியாகி உள்ளார்.
தீ விபத்தில் பலியான கேரளக்காரர்கள் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர கேரள சுகாதாரத்துறை அமைச்சர் குவைத் செல்கிறார்.