தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சமந்தா. இவருடன் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் குஷி. இப்படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் செப்.1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தெலுங்கில் நல்ல வரவேற்பும், தமிழில் கலவையான விமர்சனமும் பெற்ற குஷி திரைப்படம் 3 நாள்களில் ரூ.70.23 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தனது அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனைதொடர்ந்து நேற்று நடந்த வெற்றி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சியுடன் பேசினார். குஷி பட வெற்றிக்கு ரூ.1 கோடியை மக்களுடன் பகிர்ந்துக்கொண்டால்தான் தூக்கம் வரும். அதற்காக 100 குடும்பங்களை தேர்ந்தெடுத்து தலா ரூ.1 இலட்சம் பரிசளிக்க இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் அதற்கான அறிவிப்பினையும், படிவ லிங்கையும் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த படிவத்தை பூர்த்தி செய்யும் நபர்களில், 100 குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இதை பரிசளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏழை குடும்பங்களுக்கு படிப்பு அல்லது மருத்துவ செலவிற்கு இந்தப் பணம் உதவினால் மகிழ்ச்சியாக இருக்குமென தெரிவித்துள்ளார்.