கள்ளக்குறிச்சி கள்ளசாராய விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது. விஷ சாராய சம்பவத்தில் 6 பெண்கள் பலியாகி இருப்பதை குறிப்பிட்டுள்ள மகளிர் ஆணையம், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமத்தில் தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் குஷ்பு மற்றும் 3 பேர் கொண்ட விசாரணை குழு நேரில் சென்று இன்று விசாரணை நடத்தினர். மேலும் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் நிருபர்களிடம் குஷ்பு பேசுகையில் … விஷ சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச் சாராய உயிரிழப்பில் 62 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு பதிலளிக்கக் கூடியவர்கள் யார் என்பதை பார்க்க வேண்டும். நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் பல இடங்களில் தவறு நடந்துள்ளது தெரியவந்தது. இங்குள்ள அதிகாரிகள் அது தெரிந்திருந்தும், தெரியாதது போல நடந்துள்ளனர். இதுபற்றி டெல்லி மகளிர் ஆணையத்தில் நாளை அறிக்கை அளிப்போம். சிபிசிஐடி மேற்கொண்டு வரும் விசாரணை தொடர்பாக எங்களுக்கு ஏதும் அறிக்கை தரவில்லை. இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும். சிபிஐ விசாரணைக்கு மாற்றதது ஏன் என்பது தெரியவில்லை. இங்குள்ள அதிகாரிகள்தான் குற்றவாளிகள். அவர்களுக்கு அனைத்தும் தெரிந்தும், தெரியாதது போல் நடிக்கிறார்கள். அதுதான் மிகப்பெரிய குற்றம். மது அருந்துபவர்களுக்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும், அவ்வளவுதான். குடிக்க முடிவு செய்துவிட்டால் அவர்களுக்கு ஆயிரம் காரணம் கிடைக்கும். இந்தப் பகுதியில் கள்ளச் சாராயம் எளிதாக கிடைத்திருக்கிறது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவரகள் சராசரியாக 3 பாக்கெட் வரை குடித்துள்ளனர். மெத்தனால் கலந்த சாராயத்தைக் குடித்துள்ளனர். கள்ளக்குறிச்சி போலீஸ் இதுவரை என்ன செய்தது என்ற கேள்வி எழுகிறது. சிபிசிஐடி 250 லிட்டர் கள்ளச் சாராயத்தை அழித்ததாக கூறுவதற்கு ஆதாரம் இல்லை. காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கையில்லை என்று பாதிக்கப்பட்டோர் கூறினார்கள். இந்த கேள்வியை கேட்க வேண்டிய இடத்தில் கேட்போம்” என்று அவர் கூறினார்.