மயிலாடுதுறை மாட்டத்தில் 1,82,500ஏக்கரில் விவசாயம் செய்யபட்டுவருகிறது. இதில் குறுவை விவசாயம் 97,500 ஏக்கரில் நடைபெறுவது வழக்கம். வருடந்தோறும் சம்பா மற்றும் தாளடி விவசாயம் அதிகபட்சமாக 1,70,000 ஏக்கரில் நடைபெறும்.
இந்த ஆண்டும் வழக்கம்போல் நிலத்தடிநீரைக் கொண்டு விவசாயப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது, குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் தாலுகாவில்தான் அதிக அளவில் முன்பட்ட குறுவை சாகுபடி நிலத்தடி நீர்மூலம் நடைபெறும். அதற்கு அடுத்தபடியாக மயிலாடுதுறை, தரங்கம்பாடி தாலுகாக்கள் இறுதியாக சீர்காழி தாலுகா என நிலத்தடி நீரைக் கொண்டே குறுவை மற்றும் சம்பா, தாளடி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் 72,500 ஏக்கரில் குறுவை விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது, காவிரி நீர் குறிப்பிட்ட காலத்தில் வராததால் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் குறுவை விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். அதுவும் சீர்காழி தாலுகாவில்தான் குறுவை விவசாயம் குறைய வாய்ப்புள்ளது. முப்போக விவசாயத்திற்கு ஓரளவிற்கு தடங்கல் இல்லாமல் மின்சாரம் வழங்கிவருவதால் குறுவை நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரத்தில் நிலத்தடி நீரைக்கொண்டு சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்கள் ஒரு மாத பயிராக தற்போது வளர்ந்து களை பறிக்கும் நிலைக்கு வந்துள்ளது. தற்போது குறவை தொகுப்பினை முதல்வர் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.