தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல்தான். குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது.
நடப்பாண்டு மேட்டூர் அணை வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரம் அடைந்தது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் சுற்று வட்டார பகுதிகளான பெருமாக்கநல்லூர், வையசேரி, புரசக்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பம்பு செட் மற்றும் ஆற்று நீரைக் கொண்டு 1000 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நிலையில் சாகுபடி செய்துள்ள குறுவை நெற்பயிரில், இலை கருகல் நோய் தாக்கியதால் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெற்கதிரில் உள்ள இலைகள் கருகியதால் நெல்மணிகள் பதராகி மகசூல் இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவே இந்த நோய் நெல்லை தாக்கி மகசூல் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் அறுவடை செய்த நெல்மணிகள் அறுவடை கூலிக்கு கூட பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
எனவே அந்த பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட வயல்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஏக்கர் கணக்கில் நெல்மணிகள் பதறாய் போனதால், விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.