அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:
திமுக, ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை பயிர்களுக்கு காப்பீடு செய்ய நிதி வழங்காத அவலமும் நிலவுகிறது. கடந்த 10 ஆண்டுகால அதிமுகவின் ஆட்சியில் மூன்று முறை விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி மற்றும் புயல் வெள்ளத்தின்போது பாதிப்படைந்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு மற்றும் அரசு நிவாரணம் என்றும், வறட்சிக் காலங்களில் குறுவை தொகுப்பு மற்றும் சம்பா தொகுப்பு வழங்கப்பட்டு, வேளாண் பெருமக்கள் அவர்களது நிலங்களில் பயிர் செய்வதற்கு வேண்டிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்தது அதிமுக அரசு. எனது தலைமையிலான அதிமுக அரசு வறட்சிக் காலமான 2017-2018ம் ஆண்டில், சுமார் 15.18 லட்சம் விவசாயிகள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 31.71 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு காப்பீடு செய்யப்பட்டு, பிரீமியம் தொகைக்காக 651 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது.
ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டு சாதனை படைத்துவிட்டோம் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த திமுக அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாமல் விவசாயிகளுக்கு பெரும் துரோகத்தை இழைத்துள்ளது , உடனடியாக பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடி நிலங்களை அதிகாரிகள் மூலம் கணக்கீடு செய்து உரிய இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க 26.8.2023 அன்று வெளியிட்ட அறிக்கை மூலம் நான் திமுக அரசை வலியுறுத்தினேன். ஆனால், இதுவரை இந்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், 21.9.2023 அன்று வேளாண்மைத் துறை மந்திரி, 2022-23ம் ஆண்டு சம்பா சாகுபடிக்காக 4 தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் சுமார் 2,319 கோடி ரூபாயை காப்பீட்டுத் தொகையாக செலுத்தி உள்ளதாகவும், கடந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்து பாதிப்படைந்த சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வெறும் 560 கோடி ரூபாயை மட்டுமே காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சம்பா சாகுபடி மேற்கொண்டு ஓராண்டுக்குப் பிறகு காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்ற இழப்பீட்டினை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் வேளாண்மைத் துறை மந்திரி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுமார் 2,319 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகை செலுத்தியுள்ள திமுக அரசு, வெறும் 560 கோடி ரூபாயை மட்டும் இழப்பீடாகப் பெற்றுள்ளது. எனவே, 2022-23ம் ஆண்டு சம்பா சாகுபடி மேற்கொண்டு, பாதிப்படைந்த வேளாண் நிலங்களை மீண்டும் ஒருமுறை முழுமையாக கணக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் முழுமையான இழப்பீட்டு (நிவாரணம்) தொகையினை பெற்றுத் தருமாறு வலியுறுத்துகிறேன்.
இந்த ஆண்டு குறுவை சாகுபடி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த விபரங்களை முழுமையாகக் கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகையாக ஏக்கர் ஒன்றிற்கு 35,000/- ரூபாயை உடனடியாக வழங்க வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டுமென்று விவசாயிகள் வைத்த கோரிக்கையினை ஏற்று, அம்மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன். இல்லாவிடில், விவசாயிகளின் நலனுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் திமுக அரசை எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.