மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்வதற்கு நடப்பாண்டு 93 ஆயிரத்து 711 ஏக்கரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஜுன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு குறுவைப்பணி துவங்க உள்ளது. இதற்கிடையே நிலத்தடிநீரைக் கொண்டு, குத்தாலம், மயிலாடுதுறை தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுக்காக்களில் பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் நிலத்தை, அண்டை வெட்டுதல், நிரவுதல் டிராக்டர் இயந்திரம் மூலம் உழவடித்தல் போன்ற வேலைகளை செய்தும் வருகின்றனர். பாய்நாற்றங்களில் முளைத்த நாற்றுகளை வயலில் தற்போது நடவு செய்யும் பணியை துவங்கியுள்ளனர். தற்போது வரை மாவட்டத்தில் 10
ஆயிரம் ஏக்கர் வரையில் நடவு பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை சுற்றியுள்ள கிராம புறங்களில் நாற்று நடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் கோடைவெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், தங்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கவும், பணி சுணக்கம் இன்றி மும்முரமாய் நடவு செய்யவும் பெண்கள் தங்களுக்கு தெரிந்த நாட்டுப்புற பாடல்கள், தெம்மாங்கு பாடல்களை சினிமா பாடல் பாணியில் பாடி உற்சாகத்தோடு நாற்று நடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.