மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுக்காகளில் பம்புசெட் மூலம் நிலத்தடி நீரை கொண்டு 94 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. தற்போது அங்கு அறுவடை பணிகள் தொடங்கிவிட்டன. மேற்கண்ட 4 தாலுகாக்களிலும் பரவலாக அறுவடை நடந்து வருகிறது. அடுத்த வாரத்தில் அறுவடை முழு வீச்சில் நடைபெறும்.
மேட்டூரீல் திறக்கப்பட்ட காவிரிநீர் மயிலாடுதுறை மாவட்டம் வந்தடைந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. ஒருசில இடங்களில் மட்டும் கனமழை பெய்தாலும் பல இடங்களில் காற்று பலமாக வீசியதில் ஒருசில நாட்களில் அறுவடை செய்யவேண்டிய நெற்பயிர்கள் வயலில் சாய்ந்ததால் மகசூல் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வில்லியநல்லூர் ,கொற்கை, கொண்டல், திருவிழந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறுவை பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்படுவதோடு இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் நேரமும் அதிகமாகி விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதோடு நெல்லின் ஈரப்பதம் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் சிறு விவசாயிகளால் அறுவடை செய்யப்பட்டு அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் நெல்லினை காயவைத்து வருகின்றனர்.