தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. இந்த சர்க்கரை ஆலைக்கு தோழகிரி பட்டி, மேட்டுப்பட்டி, திருக்கானூர்பட்டி, மஞ்சப் பேட்டை, முதுகுளம், வீரடிப்பட்டி உட்பட சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து கரும்பு விவசாயிகள் இந்த சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை விநியோகம் செய்து வருகின்றனர்.
பல்வேறு இடையூறுகள் மற்றும் இயற்கை இடர்பாடுகளைத் தாண்டி கரும்பு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் கரும்புகளை குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு கொண்டுவந்து சேர்க்கின்றனர். இருப்பினும் பழம்பெருமை வாய்ந்த இந்த கரும்பு சர்க்கரை ஆலையை தலைமை நிர்வாகி, நிர்வாக அலுவலர் மற்றும் கரும்பு அலுவலர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு சென்று விட்டனர்.
நிர்வாக சீர்கேடுகளில் சிக்கித் தவிக்கும் இந்த சர்க்கரை ஆலை அவலத்தை நினைத்து கரும்பு விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். மேற்குறிப்பிட்ட மூவரும் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு வேண்டியவர்களிடம் மட்டும் பணம் பெற்றுக்கொண்டு அவர்கள் விரும்புகிற இடத்திற்கு பணியிட மாற்றம் செய்து கொடுக்கின்றனர். சர்க்கரை துறை ஆணையர் உத்தரவே அலுவலகப் பணியாளர்கள், கரும்பு அலுவலர்கள் காலை 10 மணிக்கு வந்து மாலை 5:30 மணி வரை பணி செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் கரும்பு உதவியாளர்கள் காலை 7 மணிக்கு அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு மூடுவிழா நடத்தும் நிலை ஏற்படும்.
எனவே தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தி நிர்வாக சீர்கேடுகளை களைந்து, அதிகார துஷ்பிரயோகம் செய்யும் நிர்வாக அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் கோவிந்தராஜ், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம், தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எம்.மணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி, கந்தவேலு, காவிரி உரிமை மீட்பு குழு வெள்ளாம்பெரம்பூர் துரை.ரமேஷ், தமிழக கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி அறிவழகன், முன்னோடி விவசாயிகள் மஞ்சப்பேட்டை ராமச்சந்திரன், கண்டிதம்பேட்டை கோவிந்தராஜ், விளார் செந்தில், சிலம்பரசன், அகிலன், சின்னதுரை, கல்யாணசுந்தரம்,சுடர்வண்ணன், விஜயகுமார் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் இந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் விவசாயிகள் அனைவரையும் ஒன்று திரட்டி சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று கரும்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.