உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டின் மகா கும்பமேளாவில் ஒவ்வொரு நாளும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளாவை முழு கும்பமேளா அல்லது பூரண கும்பமேளா என்று அழைப்பார்கள். தற்போது நடைபெறுவது மகா கும்பமேளா ஆகும். இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதால் மிகவும் சிறப்பு பெற்றுள்ளது. கடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் பிரயாக்ராஜில் புனித நீராடி செல்கிறார்கள். மகா கும்பமேளாவில் அமிர்த ஸ்னானம் எனப்படும் சிறப்பு நீராடல் என்பது மகரசங்கராந்தி, மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி, மகி பூர்ணிமா மற்றும் மகா சிவராத்திரி ஆகிய தினங்களில் நடைபெறும். இந்த விசேஷ நாட்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து புனித நீராடினர். கூட்ட நெரிசல் போன்ற அசம்பாவித சம்பவம் மீண்டும் நடைபெறக் கூடாது என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி மகா கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார். தொடர்ந்து அவர் புனித நீராடும் இடத்திற்கு படகின் மூலமாக சென்றார். அப்போது கரையோரம் நின்ற மக்களை பார்த்து பிரதமர் மோடி கை அசைத்தார். தொடந்து பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். மூன்று முறை மூழ்கி எழுந்து வழிபாடு செய்தார். காவி நிற உடை அணிந்திருந்தார் பிரதமர் மோடி. மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வரும் நிலையில், மோடி வருகையின் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பிரக்யாராஜ்ஜில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புனித நீராடிய பிறகு பிரதமர் மோடி அங்குள்ள ஹனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பிரயாக்ராஜ் நகரில் பிரதமர் மோடி சுமார் 2 மணி நேரம் இருப்பார் என்பதால் காவல்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் அந்நகரம் கொண்டு வரப்பட உள்ளது. பிரதமர் மோடி இதற்கு முன்பாக கடந்த 2019 அம் ஆண்டு கும்பமேளாவிற்கு சென்றார். அப்போது புனித நீராடிவிட்டு தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவி சுத்தம் செய்தார்.