தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் பைபாஸ் சாலையில் உள்ளது காளி இன்ஜினியரிங் ஒர்க்ஸ் . இது ஷட்டர் அண்டு ரூபிங் தயாரிப்பு நிறுவனம். கடந்த 26ம் தேதி மதியம் இந்த நிறுவனத்திற்கு 5, 6 பேர் வந்தனர். அவர்கள் தங்களை அந்த பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என்றும், தங்கள் பகுதியில் கோயில் திருப்பணி செய்ய இருப்பதாகவும் அதற்கு நன்கொடை தரும்படியும் கேட்டு உள்ளனர்.
அப்போது அந்த நிறுவனத்தில் இருந்த உரிமையாளரின் மருமகன் மோகன்(38), மகன் சவுந்தர்யன்(28) ஆகியோர் ரூ.2 ஆயிரம் கொடுக்க முன் வந்தனர். அதை ஏற்க மறுத்த அவர்கள் இது என்ன பிச்ச காசு, புதிதாக கோயிலுக்கு கூரை அமைத்து தரவேண்டும் என்று கேட்டு உள்ளனர். அதற்கு நிறுவனத்தில் இருந்த இருவரும் உரிமையாளரிடம் கேட்டு சொல்கிறோம் என்று கூறி உள்ளனர்.
இதை அவர்கள் ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அவர்கள் போன் செய்து மேலும் சிலரை அழைத்தனர். சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் பலர் அங்கு வந்தனர். அவர்கள் கடையில் இருந்த மோகன், சவுந்தர்யன் ஆகிய இருவரையும் சரமாரி்யாக தாக்கியதுடன் மோகன் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினையும் பறித்துக்கொண்டு ஓடிவிட்டதாக நிறுவனத்தின் தரப்பில் கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். மேலும் பலரை தேடி வருகிறார்கள்.