கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழ்நாடு அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் ரூ.79.42 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் தொடங்கி கும்பகோணம் நோக்கி ஒரு பிரிவாகவும், திருவலஞ்சுழி தொடங்கி தஞ்சாவூர் நோக்கி ஒரு பிரிவாகவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை பாபநாசம் தொகுதி எம்எல்ஏவும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருமான ஜவாஹிருல்லா சுந்தரபெருமாள் கோவில் ஊராட்சி சோழன் நகர் அருகில் பார்வையிட்டு, கூடுதல் விபரங்களை தேசிய நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சக்திவேல், உதவி கோட்ட பொறியாளர் திருகுணா, உதவி பொறியாளர் முத்துகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் துணை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா, மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது ரிஃபாயி, மாவட்ட துணைத் தலைவர் சலீம் ஆகியோர் உடனிருந்தனர்.