தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் 6வது வார்டு அடிச்சேரி தெருவில் தார்சாலை அமைப்பதற்காக சாலையை கொத்திபோட்டு கருங்கல் ஜல்லிகள் பரப்பிய நிலையில் ஒரு மாதமாகியும் சாலையை புதுப்பிக்கப்படாததால் கிராம மக்கள் நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ முடியாத நிலை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் திடீரென நேற்று சாலையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள் சாலைப்பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி சிறிது
நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கிராம மக்கள் போராட்டம் குறித்து தகவலறிந்த மெலட்டூர் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் உடனடியாக சாலைப்பணி ஒப்பந்ததாரரிடம் தொடர்பு கொண்டு கிராம மக்கள் போராட்டம் குறித்து கூறி சாலைப்பணியை விரைந்து முடிக்குமாறு தெரிவித்ததை தொடர்ந்து சாலைப்பணிக்கான இயந்திரங்கள் மற்றும் சாலைப்பணிக்கான தளவாட பொருட்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.