Skip to content
Home » உயிர்க் கூட்டங்களில் மனித இனம் தனித்துவமானது… திருவடிக்குடில் சுவாமிகள்…

உயிர்க் கூட்டங்களில் மனித இனம் தனித்துவமானது… திருவடிக்குடில் சுவாமிகள்…

கும்பகோணம் ஜோதிமலை இறைப் பணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக் குடில் சுவாமிகள் பாபநாசத்தில் நிருபர்களிடம் கூறியதாவது…  உயிர்க் கூட்டங்களில் மனித இனம் தனித்துவமானது. தனக்கான வாழ்வியல் முறையை பகுத்தறிவைக் கொண்டு காலத்திற்கு ஏற்றார் போல தகவமைத்துக் கொண்டே இருக்கிறது.
பிறப்பும் இறப்பும் வெறுமனே நிகழ்வதில்லை. அதன் காரணங்களை ஆராயப் புகும்போது அனைத்திற்கும் அப்பாற்பட்ட “கடவுள்” என்கிற ஒப்பற்ற உருவமற்ற பரம்பொருளையும் உணர்கின்றான். அதன் தொடர்ச்சியாக
வாழ்வியல் ஒழுக்கங்களையும் தத்துவங்களையும் வகுத்துக் கொள்கிறான்.
உலக நாடுகள் முழுவதிலும் இப்படி எத்தனையோ தத்துவங்களும் கொள்கைகளும் உள்ளன. மனித குலத்தை பக்குவப்படுத்தும் இந்த கொள்கைகள் சமயங்கள் ஆகும். உலகில் எண்ணற்ற சமயங்கள் உண்டு. சமயங்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. தமிழில் மதம் என்ற சொல் சமயங்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. மதம் என்ற சொல்லாடலை தவிர்த்து சமயம், நெறி, மார்க்கம் என்கின்ற பொருள் பொதிந்த சொல்லை பயன்படுத்துவது ஆன்மீக உலகுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.
காரணம், மதம் என்கின்ற சொல் “யானைக்கு மதம்” என்பதாக வெறிபிடித்தல் என்னும் பொருள் கொள்ளப்பட்டு, எதிர்மறையான சிந்தனைகளை உண்டு பண்ணுகிறது. ஆனால், சமயம் என்கின்ற சொல் சமைத்தல், பக்குவப்படுத்தல் என்கின்ற பொருளை நேரடியாக கொடுக்கிறது. “ஏழிளந் தமிழ்” என்று சொல்லப்படும் நீதி நூல்களில், நல்வழி என்ற நூலில் சமயங்கள் என்ற சொல்லையே ஔவையார் பயன்படுத்தி உள்ளார்.
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும் தீதொழிய நன்மை செயல்.  – நல்வழி உலகில் உள்ள அத்தனை சமயங்களும் நன்மை செய்யவே மனிதர்களை வழி நடத்துகிறது என்கின்ற பொருளில் அமைந்துள்ள மேற்காணும் பாடலை சிந்திக்க வேண்டும். “எம்மதமும் சம்மதம்” என்பது சமய நல்லிணக்கத்திற்கான சொல்வழக்காக இருப்பது போல, சமய சமரசம் இதய பரவசம்! என்ற வரிகள் வழக்கத்தில் வர வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *