Skip to content
Home » “ஐயோ வலிக்குதே” கும்பகோணம் காங்., மேயர் டிராமா

“ஐயோ வலிக்குதே” கும்பகோணம் காங்., மேயர் டிராமா

  • by Authour

கும்பகோணம் மாநகராட்சி மேயராக பதவி வகித்து வருபவர் சரவணன். தமிழகத்திலேயே ஒரே காங்., கட்சி மேயர். கடந்த சில மாதங்களாக இவருக்கும், தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்றைய தினம் கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 54 தீர்மானங்களுக்கான கோப்புகளை பார்க்க வேண்டும் என தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி மேயரிடம் கேட்டார். அப்போது மேயர் கூட்டம் முடிந்துவிட்டதாகக் கூறி விட்டு தனது அறைக்கு செல்ல முயன்றார். இதனையறிந்த திமுக கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி வேகமாக ஓடிச்சென்ற மேயர் அறை முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மேயர் சரவணன் சில நிமிடங்கள் யோசித்த மேயர் சரவணன் திடீரென ” ஐயோ நெஞ்சு வலிக்குதே” எனக்கூறி மாமன்ற அலுவலகத்தின் தரையில் படுத்தபடி, அலறினார். இதனால் பதறிப்போன கவுன்சிலர்களும் அலுவலர்களும் அவரை ஆசுவாசப்படுத்தி, மேயர் அறைக்கு அழைத்துச் சென்றனர். கோப்புகளைக் கேட்டால் நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டது என்று மேயர் நடிப்பதாக தட்சிணாமூர்த்தி உட்பட தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். காங் மேயர் ஐயோ நெஞ்சு வலிக்குதே எனக்கூறி சத்தம் போட்டு உருண்ட சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.