தஞ்சை மாவட்டம், கும்பகோணம் கால்பந்து கழகம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து நடத்திய மாநில அளவிலான எழுவர் கால் பந்தாட்ட போட்டி கடந்த வெள்ளிக்கிழமை கும்பகோணத்தில் தொடங்கியது. மூன்று நாட்கள் கும்பகோணம் பெசன்ட் ரோட்டில் உள்ள நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியின் முதல் நாளில் கும்பகோணம் மாநகர திமுக செயலாளர் சு.ப.தமிழழகன் மற்றும் டிஎஸ்பி மகேஷ்குமார் ஆகியோர் மாணவர்களை பாராட்டி முதல் போட்டியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில் தஞ்சை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18 முதல் 30 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட சுமார் 25 அணிகள் பங்கேற்று விளையாடியது. ஒவ்வொரு போட்டிகளும் அனல் பறக்க நடந்தது. அணி வீரர்கள் தங்கள் அணியை பெற்றி பெற கடுமையாக போட்டி போட்டனர். இறுதி போட்டியில் சென்னை எண்ணூர் நடராஜ் மெமோரியல் கிளப் அணியினர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் நிறைவு நாள் மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தஞ்சை வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பொறியாளர் சிவகுமார் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக எம்.பி கல்யாணசுந்தரம் மற்றும் கும்பகோணம் மாநகர திமுக செயலாளர் சு.ப.தமிழழகன் ஆகியோர் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற சென்னை எண்ணூர் நடராஜ் மெமோரியல் கிளப் அணியினருக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பையும், இரண்டாம் இடம் பெற்ற கும்பகோணம் முரட்டு சிங்கிள் ஃபுட்பால் கிளப் அணியினருக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாம் இடம் பெற்ற தஞ்சாவூர் அத்லெடிக்ஸ் புல்ஸ் அணியினருக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பையும் மற்றும் நான்காம் இடம் பெற்ற பாண்டிச்சேரி செலக்டேடு செவன்ஸ் அணியினருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசினையும் வழங்கி வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர். முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பாலகுரு போட்டியை தொகுத்து வழங்கினார். உதயகுமார் நன்றி கூறினார்.