காவிரி விவகாரத்தில் திட்டமிட்டு தமிழக விவசாயிகளை திமுக அரசு வஞ்சித்து வருவதாகவும், இதனை கண்டித்து வரும் 16-ஆம் தேதி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், தமிழகத்துக்கும், கேரளா, கர்நாடகா அண்டை மாநிலங்களுக்குமிடையே தீர்க்கப்படாத நதிநீர்ப் பங்கீடு, அணை கட்டும் பிரச்சினை, கடந்த ஐம்பது ஆண்டுகளாக நிலவி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான சிக்கல்களும், பிரச்சனைகளும், திமுக ஆட்சிக்காலத்தில் உருவானவை. இவற்றுக்கான நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முயற்சிக்காமல், வீண் நாடகமாடி நீண்டகாலமாக தமிழக மக்களை, திமுக ஏமாற்றி வருகிறது.
கர்நாடகா அணைகளில் 80%-த்திற்கும் அதிகமாக தண்ணீர் இருந்தும் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் திமுக அரசின் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் தண்ணீரைப் பெற்றுத்தர திறனின்றி நடத்துகின்ற போராட்டம் கண்டனத்துக்குரியது. ஆட்சியில் உள்ள மாநில அரசு, தண்ணீரைத் தர மறுக்கும், தன் கூட்டணிக் கட்சியைப்பற்றி எதுவும் பேசாமல் மத்திய அரசைக் குறை கூறுவது, ஆளும் கட்சியின் திறமையின்மையைக் காட்டுகிறது.
காவிரி தண்ணீருக்காக கண்துடைப்பு கடையடைப்பு நடத்துவது திமுகவின் கபட நாடகம். டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் ஏமாற்றும் வேலை. பாஜகவின் சார்பிலே டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்களை காப்பாற்றுவதற்காக, கும்பகோணத்தில், திங்கட்கிழமையன்று. ஒரு நாள் வரும் அக்டோபர் 16ஆம் தேதி அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
மாநிலப் பொதுச் செயலாளர் திரு.கருப்பு முருகானந்தம் அவர்களின் தலைமையில், கும்பகோணத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று பாஜக சார்பில் கும்பகோணத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மாநிலப் பொதுச் செயலாளர் திரு.கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.