தஞ்சை மாவட்டம்,கும்பகோணம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் பெரிய சூட்கேசுடன் சென்னை செல்ல முயன்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரது சூட்கேசை சோதனையிட்ட போது அதில் 8 சந்தன மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை ஆசிரியர் காலனியை சேர்ந்த கருணாநிதி மகன் ராம்குமார் (65)
என்பதும், அவர் பாபநாசம் தாலுக்காவில் உள்ள பட்டா நிலத்தில் இருந்த சந்தன மரத்தை 8 துண்டுகளாக வெட்டி அதனை சென்னைக்கு சட்ட விரோதமாக விற்பனைக்கு கொண்டு செல்வதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் இது குறித்து நேற்று வனத்துறையினருக்கு தகவல் தந்தனர். இதன்பேரில், கும்பகோணம் வனசரக அலுவலர் பொன்னுசாமி தலைமையிலான வனத்துறையினர் இது தொடர்பாக ராம்குமாரை கைது செய்து அவர் கொண்டு வந்த சுமார் ரூ.1.50 இலட்சம் மதிப்பிலான, 8 துண்டுகளாக இருந்த 31 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.